Monday, July 14, 2008

சிங்கராஜவனம்


எங்கட வூட்டுல அண்டைக்கு சொந்தக்காரங்கள் எல்லாரும் வந்திருந்ததால கொஞ்சம் கலக்கலப்பா இருந்திச்சி. சின்னவன்கள்ட அட்டகாசத்த தாங்க முடியல. எல்லோரும் ஐந்து முதல் பத்து வயதிற்கு உட்பட்டவர்கள். ஒரே ரூமில் இருந்துகொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவங்களுகிட்டப் போய் உட்கார்ந்துகொண்டேன்.

“மாமா இவனப் பாருங்களே,”

“சாச்சா இதப் பாருங்களே”

என முறைப்பாடுகள் நிறையவே வந்துகொண்டிருந்ன.


“நானொரு கதை சொல்லவா”ன்டு கேட்டேன். எல்லோரும்

“ஆங் சொல்லுங்கென்டு” வட்டமாக உட்கார்ந்து கொண்டார்கள்.

இப்ப என்ன செய்வது கத ஒன்று சொல்ல வேணுமே. யோசித்தபோது காகமும் வடையும் கதை ஞாபகம் வந்தது.

“உங்களுக்கு காகமும் வடையும் கத தெரியுமா?”

“ஐயோ மாமா! அது எல்லாருக்கும் தெரியும்.”

“அப்ப முயலும் ஆமையும் கத”

“அதுவும் தெரியும்.”

“அப்படீண்டா எனக்கு ஒரு கதயும் தெரியாது” என்று சொல்லி தப்பப் பாத்தேன். விடுவான்களா? எல்லாரும் ஒன்டா சேர்ந்து

“சொல்லுங்க மாமா, சாச்சா ன்டு” கத்தத் தொடங்கிவிட்டான்கள்.

“சரி சரி சொல்றேன் சத்தம் போடாதீங்க.” எப்படியும் இப்ப கதயொன்ற சொல்லனுமே.


“ஒரு நாடு இருந்தது. இல்ல இல்ல, ஒரு காடு இருக்கின்றது. அங்கு சிங்கங்கள்தான் ஆட்சி செய்துகொண்டிருந்திச்சி. ஆனால், ஆனை, புலி, மொசல், எலி, நரி, மாடு எல்லாமும் அங்கு இருக்குது. கொஞ்ச காலத்துக்கு முந்தி ஆனைகள்தான் ஆட்சி செஞ்சிச்சி. ஆனா, இப்ப சிங்க ஆட்சிதான்.”


“ராஜா பேரென்னா மாமா?” என்று என்ட தாத்தாட மகன் கேட்டான்.

“ராஜாட பேரு ராஜாதான். அவனுக்கு மூன்டு நாநா, தம்பிமார். மூத்தவன்ட பேரு சாம்பல். மத்தரெண்டு பேரும் தம்பிமார். அவன்கள்ட ஒத்தன்ட பேரு கோப்பை. இவன் பொல்லாதவன். முந்திக் காலத்தில சிங்கப் படையிலும் வேலை செஞ்சிருக்கான். ரெண்டாவது தம்பி விசில். இவன் டிரபிக் பொலிஸ்காரன்போல நெறையப் பேர புடிச்சி வைச்சிட்டிருக்கான். ராஜாக்கு மூன்று சிங்கக் குட்டிகளும் இருக்குது. அதுகளும் ராஜா ரெண்டடி பாஞ்சா ஆறடி பாயுங்க. இந்தக் காட்டுல இருவது வருசத்துக்கு மேலா புலிகள் எதையாவது செய்துகொண்டே இருக்குதுகள்.”


“புலி சிங்கங்கள கொல்லுமா மாமா?”

“ம்ம்... புலிகள் நெறைய பெரிய சிங்கங்களையே கொண்டிருக்குது. ஒரு தடவ ராணிய கொல்லப்பார்திச்சி. ஆனா ராணிட கண் மட்டும்தான் பொட்டயாச்சி. ராணி தப்பிறிச்சி.”

“காட்டுல ஆட்சிய புடிக்கிறத்துல சிங்கத்துக்கும் ஆனைக்கும் ஒரே போட்டிதான். இப்ப ரெண்டு மூன்று வருசமா காண்டா மிருகங்களும் ஆட்சிய புடிக்க தடுமாறுதுக.”

“காண்டா மிருகங்கள் நெறைய இருக்குதா மாமா?”


“இருந்திச்சிதான். அதுகல ஆனைகள் கொன்டுபோட்டிச்சி. அதுக்குப் பொறகு அதுகள் சிங்கத்தோடு சேர்ந்துகொண்டிச்சி. ஆனா, சிங்கத்திட ராஜா அதுட தம்பி கோப்ப, விசிலும் சேர்ந்து காண்டாமிருகக் கூட்டத்த ரெண்டா பிரிச்சி போட்டிச்சுகள். இப்ப ஒரு கூட்டம் சிங்க ராஜாவோட கோவத்துல இருக்குதுகள். மத்தக் கூட்டம் சிங்க ராஜாக்கு சப்போட் பண்ணிக்கொண்டு இருக்குதுகள்.”


“காண்டாமிருகங்கள் சிங்கங்கள கொல்லலையா சாச்சா?”

“இல்ல, காட்டுல சிங்கங்கள்தான் கூடுதலா இருந்திச்சி. இந்த சிங்கங்கள் புலிகள இறைச்சி தின்ற மிருகங்களா கணக்கெடுக்கள. புலிகளும் லேசிப்பட்டதில்ல. எங்களுக்கு காட்டுல ஒரு பகுதி வேணும்டு கேட்டிச்சிகள். சிங்கங்கள் குடுக்குமா?”

“இல்ல மாமா.”


“அதுக்குப் பொறகு மிச்சம் பிரச்சினகள் வந்திச்சி. புலிகளும் சிங்கங்களும் பேசிப் பார்த்திச்சி. ஓநாய், நரி, குதிரை எல்லாம் பேசி பாத்திச்சி. ஆனா, எதுவும் சரிவரல்ல.”

எல்லோரும் அமைதியாக இருப்பது என்னவோ என நினைத்து தாத்தா, தங்கச்சி, மைனி, நானா எல்லாரும் வந்து பாத்துட்டு, பாத்துட்டு போனாங்க, நான் கண்ணைக் காட்டி அனுப்பிவிட்டேன். இடையில் உம்மா

“சாப்பாடு போடவா”ண்டு கேட்டா?

“சொனங்கிப் போடுங்க உம்மம்மா”ன்டு எல்லோரும் சொன்னான்கள்.


“ஒரு நாள் புலிகள்ட ஒரு கூட்டம் சிங்கத்துட பத்து பணெண்டு பேர கொன்டுபோட்டிச்சுகள். அதனால கோபமடைந்த சிங்கங்கள் புலிகள காட்டுக்குப் போய் நெருப்பு வைச்சிச்சு. புலிகள் சிலத அந்த நெருப்புல தூக்கிப் போட்டிச்சி. முயல்களெல்லாம் நடுங்கிப்போச்சி. அதுக்குப் பொறகுதான் ரெண்டு கூட்டத்துக்கும் சண்ட ஆரம்பிச்சிச்சி.”


“இப்பயும் அந்தக் காட்டுல புலிகளும் சிங்கங்களும் சண்ட புடிக்குதுகளா மாமா?”

“ம்ம்... இன்னும் ராஜா, கோப்ப, விசில் எல்லாரும் சேர்ந்து புலிகள் எல்லாத்தையும் கொன்டுடுவோம் என்றுசொல்லி அழிச்சிக்கொண்டு இருக்குதுகள்.”

“அப்ப புலிகள் சும்மா இருக்குமா மாமா?”

“இல்ல. புலிகளும் சிங்கங்கள கொல்லுதுகள்.”

“மான்களுக்கும் முயல்களுக்கும் சிங்கத்தப்போல புலிகளப் போல சண்ட புடிக்க ஏலாதுதானே.”

“ம்ம்.. சண்ட புடிக்க ஏலாம மான்களும், மொசல்களும் சிங்கத்தோட கொஞ்சம் பேரும் புலிகளோட கொஞ்சம் பேரும் சேர்ந்து கிட்டிருக்கிதுகள்.”


“மாமா, இந்த ராஜா சிங்கத்துக்கு கொஞ்சமாவது இரக்கமில்லையா?”

“அதுகிட்ட கொஞ்சமும் இரக்கமில்ல. ஆனால் இரக்கம்போல நல்லா நடிக்கும். மொசல் குட்டிகள்ட தலைய தடவி உடும். மோந்துகொல்லும். கொஞ்சம் மொசல்கள் இதெல்லாம் நம்புறதும்தான்.”

“மாமா புலிகளும் சிங்கங்களும் சாவுறது நல்லம்தான். ஆனா, மொசல்களும் மான்களும் பாவமில்லையா?”எனக்கு ஒரு கோல் வந்திச்சி. இதுதான் சந்தர்ப்பமென்று எழும்பி வந்துவிட்டேன்.
20080706