Friday, April 3, 2009

இது நண்பர்களின் கதை!



( i )

இரவு பத்து மணியிருக்கும். அலுவலகத்தில் கொஞ்சம் பிஸியாக இணையத்தில் தகவலொன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். கைத்தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நண்பன் ஒருவன் தொடர் பிலிருந்தான். பல நண்பர்கள் கொன்பரன்ஸிலிருப்பதாகவும், என்னையும் இணைத்துக் கொள்வதாகவும் கூறினான். எனக்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது.



"யார் யார் யார் கொன்பரன்ஸில் இருக்கிறாங்க."
அவன் "நான், ஹன்பல், ரிம் ஸான்,..." என்றான்.
சிறிது நேரம் சில பட்டன்களை அழுத்தும் சத்தம் கேட்டது. அழைப்பு துண்டிக்கப்பட்டு விடக்கூடாதா என மனம் ஏங்கியது.
அவன் பேசினான். "எனது போனிலிருந்து கொன்பரன்ஸ் போட ஏலாம இருக்குது. ரிம்ஸான்ட போன்ல இருந்து போட்றன்." என்று தொடர்பைத் துண்டித்தான்.



மீண்டும் கைத்தொலைபேசி இசைத்தது.
"எங்கடா மற்றயவன்கள்"
"ஹன்பல்ட போன்ல சார்ஜ் இல்லயாம்"
"நான் நெனச்சதுதான். அவன் என்னோட பேசமாட்டான்."
என்று கூறியது நான்தான்.
சிறிதுநேரம் பேசிவிட்டு பக்கத்திலிருந்த இன்னுமொரு நண்பனிடம் கைத்தொலைபேசியைக் கொடுத்து விட்டு மீண்டும் இணையத்தில் தேடத் தொடங்கினேன்.



( ii )

‘அம்ப யஹலுவோ’ என்ற கதையை சிலவேளை நீங்கள் வாசித் திருப்பீர்கள். உங்களுக்கு 25 வயதுக்கு மேலிருக்குமென்றால் தொலைக்காட்சியில் நாடகமாக பார்த்திருப்பீர்கள். அல்லது கடந்த மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருந்தால் அதன் ஒரு சிலக் காட்சிகளை பார்க்கக்கிடைத்திருக்கும். சில வருடங்களுக்கு முன்பு எவரேனும் இரண்டு நெருங்கிய நண்பர்களைப் பார்த்தால் ‘அம்ப யஹலுவோ’ என்று சொல்வார்கள். ‘அம்ப யஹலுவோ’ என்றால் பால்ய நண்பர்கள்.



நானும் ஹன்பலும் அம்பயஹ லுவோ இல்லாவிட்டாலும் நெருங்கிய நண்பர்கள் தான். ஓ லெவல் படித்துவிட்டு விடுதி வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர்தான் ஹன்பலை எனக்குத் தெரியும். அதனால் மணல் வீடு கட்டியும், மண் பிட்டு செய்தும், சேறு விளையாடியும் மழையில் நனைந்ததுமான அனுபவங்கள் இல்லை.



வீட்டை விட்டு முதன் முதலாக பிரிந்த எனக்கு, ஒரு கிராம சூழலில் வளர்ந்த எனக்கு, பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன் பழகுவது மிகக் கஸ்டமாக இருந்தது. அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.
ஆரம்பத்தில் எனக்கு ஆறுதல் சொன்னது பக்கத்திலிருந்த குண்டு நண்பன் ரிஸ்மிதான். அவனை நாங்கள் ‘பீல்’ என்றுதான் கூப்பிடுவோம். ‘பீல்’ என்றால் யானை, அதையே சிங்களத்தில் ‘அலியா’ என்றும் சொல்வதுண்டு. அவனுடன் கொஞ்சம் நெருக்கமாக பழகமுடிந்தது. காலத்தின் வேகத்திற்குள் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சில வருடங்களிலே வளாகத்திலிருந்து நின்று விட்டான்.



அதன் பிறகான காலப்பிரிவில் நிறைய நண்பர்களுடன் பழகக்கிடைத்தது. அவர்களில் ரிம்ஸான் முக்கியமானவன். எனினும் அவனைப் பற்றி இங்கு சொல்வது நோக்கமில்லை. அதன்பிறகுதான் ஹன்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹன்பல் எல்லாத் துறையிலுமே திறமையானவன். கல்வியிலும் விளையாட்டிலும் மிகச் சிறப்பாக செயற்படுவான்.
அவன் பரீட்சையின் போது தூக்கம் விழித்துப் படிப்பான். அப்படியே மேசையில் சாய்ந்து தூங்கி விடுவான். பின்னர் எழுந்து படிப்பான். அப்படியே தூங்குவான். நான் இந்த செயல்களைப் பார்த்து தனியாகவும் நண்பர்களிடம் சொல்லியும் சிரிப்பேன்.



பரீட்சைக் காலங்களில் அவனுக்கு அடிக்கடி சுகயீனம் ஏற்படும். அவனுக்கு சிங்களம் தெரியாததால் என்னிடம் தான் வருவான். எந்த வேளையிலும் அவனை சைக்கிளில் கூட்டிச் செல்வதற்கு நான் தயங்கியதில்லை.
ஒரு நாள் இப்படித்தான் இஷாத் தொழுகையின் பின்னர் "அடேய் எனக்குத் தலவலியாக இருக்குது. நெஞ்சுக்குள்ளயும் ஏதோ அடைக்கிற மாதிரி வௌங்குது" என்றான்.
"என்ன செய்ய வேண்டும்? ஹொஸ்பிட்டலுக்கு போவோமா?" என்றேன்.
"ஆம்" என்றான்.
வைத்தியரிடம் சென்றபோது அவனைப் பரிசோதித்து விட்டு "உங்களுக்கு ஒரு நோயுமில்லை. டென்ஷன் கொஞ்சம் வந்திருக்குது, நான் ஒரு பாணி தாரன். அத குடிங்க. இந்த மருந்துகளையும் குடிங்க." என்றுவிட்டு 500 ரூபாவை கழட்டிக் கொண்டார்.



சில நாட்கள் சென்றபின்னர் ஹன்பலுக்கு வைத்தியர் டென்ஷன் பாணி கொடுத்ததை நண்பர்களிடம் சொல்லிவிட்டேன். அவனை பரிகசித்து தள்ளிவிட்டார்கள்.



( iii )

ஹன்பல் தனக்கு எந்தவொரு பிரச்சினை வந்தாலும் என்னிடம் தான் வந்து செல்வான். அதேவேளை எமது தஃவா செயற்பாடுகளில் நாம் இருவரும் மிக ஒற்றுமையாக செயற்பட்டோம். எமது சகோதரர்களின் விடயங்களை அவதானித்து வந்தோம். யாருக்கேனும் பிரச்சினை என்று தெரிந்தால் அவன் என்னிடம் சொல்வான். நானும் அவ்வாறுதான். குறித்த பிரச்சினைக்கு எப்படியேனும் தீர்வுகாண முயற்சிப்போம். சிலவேளை எல்லோரும் உறங்கிவிட்ட இரவுகளில் அவனது கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு இரகசியமாக பேசுவோம்.



இப்படியான ஒரு காலப் பிரிவில் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அந்தப் பிரச்சினையை அவன் தான் அவதானித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னான். நாமிருவரும் அந்தப் பிரச்சினையில் தொடர்புபட்ட சகோதரனை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைமானிப் பரீட்சையின் முதற்கலைத் தேர்விற்கு தயாராக வேண்டியிருந்தது.



ஹன்பலைப் பற்றி மிக நன்கு தெரிந்து வைத்திருந்ததால் அவனுடன் பரீட்சைக்காலத்தில் இது போன்ற விடயங்களை பேசினால் படிப்பதில் கவனம் செலுத்த மாட்டான். அதனால் இந்த விடயத்தில் நான் அவனை அலட்டவில்லை.



இச்சந்தர்ப்பத்தில் குறித்த பிரச்சினையில் மூன்றாவதாக முஷ்ரிப் நுழைந்தபோதுதான் இன்னுமொரு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. உண்மையில் நான் ஹன்பல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவனிடம் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஆனால், நான் அவனை வெட்டிவிட்டு முஷ்ரிபுடன் சேர்ந்து கொண்டதாக அவன் நினைத் திருக்க வேண்டும். அது பிரச்சினைக்கு புள்ளியை வைத்தது.



இந்த முறுகல் நிலையிலேயே புதிதாக இன்னொரு அபாயகரமான பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. ஹன்பல் என்னுடன் தொடர்பற்று போனபோது இலாஹியுடன் நெருங்கிப் பழகினான். ஆனால், அந்தத் தொடர்பு நீடிக்காது என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன். ஒருநாள் இலாஹி அதிர்ச்சியான ஒரு செய்தியை என்னிடம் சொன்னான். அது ஹன்பலுடன் ஏற்பட்ட பிரச்சினை. அதில் எனக்கும் ரிஷானுக்கும் மத்தியஸ்தம் வகிக்குமாறும் கேட்டுக் கொண்டான்.



நான் எவ்வளவுதான் மறுத்தபோதும் இலாஹி விடுவதாக இல்லை. அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் நம்பிவிட்டேன். முதற் கலைப் பரீட்சைக்கான திகதியும் நெருங்கியிருந்தது. எனவே, இந்தப் பிரச்சினை அவனது பரீட்சையை பாதிக்குமோ என்று பயந்தேன். பரீட்சையின் போது இலாஹியுடனே நான் திரிந்தேன். இதுவும் ஹன்பலை மிகவும் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.



பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் நானும் ரிஷானும் ஹன்பலிடம் நடந்த விடயத்தைக் கேட்டோம். அவன் ஒற்றை வார்த்தையில் தவறை ஏற்றுக் கொண்டான். அது அவனது நல்ல பண்பு. இந்த விடயம் எம்மிடம் எஞ்சியிருந்த சில வார்த்தைகளையும் பறித்துக் கொண்டது.
நான் அந்த விடயத்தை நண்பர்க ளுக்கு முன் பல தடவைகள் ஹன்பலை நோவினைப் படுத்தும் வகையில் குத்திக்காட்டியிருக்கின்றேன். அதற்காக பின்வந்த பல நாட்களில் தனிமையில் வருந்தியுள்ளேன். சிலவேளை கண்ணீர்த்துளிகளும் கூட எட்டிப் பார்த்திருக்கின்றன.



( iv )

கிரிக்கெட் மைதானத்தில் கூட எமது முரண் வெளிப்பட்டது. அவன் எப்பொழுதும் எதிரணியிலேயே விளையாடுவான். நான் அவனிடம் அவதானித்த மிகச்சிறந்த பண்பு நிதானமாகும். ஆனால், நான் பந்து வீசும்போது நிதானத்தை இழந்து விடுவான். மிக வேகமாக அடிக்க முயற்சிப்பான். நானும் மிக வேகமாகவே பந்து வீசுவேன்.



இந்த மோதலில் இருவரும் மாறி மாறி வெற்றிப் பெறுவதுண்டு. ஒரு நாள் அவன் அடித்த பந்து மிக வேகமாக உயர எழுந்து வந்தபோது நான் அதை பிடியெடுக்க முயற்சித்தேன். அப்போது எனது சுட்டுவிரல் மடங்கி விட்டது. இப்போதுகளிலும் கூட அந்த மூட்டுக்களில் வலி ஏற்படுவ துண்டு.
இந்த நிலையிலே காலம் கடந்து கொண்டிருந்தது. விடுமுறையில் வீடு செல்லும் சந்தர்ப்பங்களில் தனிமையில் நிறையவே யோசிப்பேன். இந்த விடுமுறை முடிந்து வளாகம் சென்றவுடன் எப்படியும் பேசவேண்டும் என நினைத்துக் கொண்டு வருவேன். ஆனால், அது நடப்பதேயில்லை.



( v )

ஜவாத் ஒரு சஞ்சிகை வெளியிட்டான். அதற்கு வளாகத்தில் ஒரு வெளியீட்டு விழாவையும் நடத்தினோம். எதையேனும் செய்ய வேண்டும் என்ற வெறியில் இருந்த பருவத்தில் ஜவாதின் ஆலோசனைப்படி ஒரு சஞ்சிகையை நானும் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.



அதன் துணை ஆசிரியராக அவனை செயற்படுமாறு வேண்டினேன். அவனுக்கு இலக்கியத்தில் ஆர்வமில்லை என்பது எனக்குத் தெரியும். என்னால் இதில் பங்களிக்க முடியாது என்று அவனும் தெளிவாகவே சொன்னான். என்றாலும் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று பொறுப் பேற்றுக் கொண்டு அவனது பெயரையும் போட்டேன்.



ஆனால் சில இதழ்கள் வெளிவந்ததன் பின்னர் எனக்கு தனியாக செய்ய முடியாததை உணர்ந்தேன். அவன் ஒத்துழைப்புத் தராமல் இருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அவனை துணை ஆசிரியர் பொறுப்பிலிருந்து சொல்லாமலே தூக்கிவிட்டேன்.



( vi )

வளாகத்திலிருந்து வெளியேறும் கடைசிநாள் வாழ்க்கையில் இறுதிக் கனம் வரை மங்கிப் போகாது. அந்த நாட்களில் ஒட்டோகிராஃப் எல்லாக் கல்லூரிகளிலும் பரந்து திரியும். எமது கல்லூரியிலும் அது நடந்தது. நானும் ஒரு ஒட்டோகிராஃபை எனது நண்பர்களிடம் வழங்கினேன். ஹன்பலும் ஒட்டோகிராஃப் வழங்கினான். அதில் என்ன எழுதினேன் என்பதை மறந்துவிட்டேன். ஆனால் மன்னிப்புக் கேட்டிருப்பேன் என்று நினைக்கின்றேன். அவன் என்னுடைய ஒட்டோவில் இப்படி எழுதியிருந்தான்.



unakku எழுதக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. நன்றாகப் பழகினோம். சஞ்சிகை செய்தோம். பிரிந்துவிட்டோம்...
காலத்தின் வெள்ளத்தில் எல்லாம் கரைந்து போயிற்று. இப்போது பிரியும் தருணத்தில் நானும் நீயும் நண்பர்களும்.
அவன் எழுதியது சந்தோசமாக இருந்தது. கடைசிவரியின் கவிதைத் தன்மையும் பிடித்திருந்தது.



( vii )

மிக நீண்ட நாளைக்குப் பிறகு ரிஸாதின் திருமணத்தின் போதும் எல்லோரும் சந்தித்தோம். ரிஸாதின் மாப்பிள்ளைத் தோழன் ஹன்பல்தான். மாப்பிள்ளை ரெடியாகிவிட் டான். ஹன்பல் சேர்ட் அயன் பண்ணியிருக்கவில்லை. ‘தாடா’ என்று கேட்டு நான்தான் அவனது சேர்ட்டை அயன்பண்ணிக் கொடுதேன்.




( viii )

திருமணம் முடிந்து விடைபெறும் நேரம் நான் ஹன்பலிடம் சென்று கைகொடுத்தேன். அவன் எனது கையை இறுக பிடிப்பது போல் விளங்கியது. முகத்தைப் பார்த்தேன். புன்னகைத்தான். எனது உதடுகளும் விரிந்தன. வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. ஒரு ஓரமாக சென்றோம் எல்லா நண்பர்களும் ஊ அடித்து பரிகசித்தனர். நான் "நிறைய பேச வேண்டும்" என்றேன்.
அவன் "ம்"
"இன்டைக்குப் போகப் போறாயா?" என்றான்.
"போற ஐடியாவுலதான் இருந்தேன். நீ நிக்கிறியா?"
"சரி நிக்கிறேன். இவனுக உட மாட்டானுகடா"
"இவனுகள சமாளிக்கத் தெரியாதா?"
குண்டு ரிஸ்மி "அடேய் நேரமாவுதுடா போவோமா?" என்றான்.
நான் "இல்லடா நான் நின்டு வாரேன். நீ போ" என்றேன்.
எல்லோரும் ‘ஊ’ என்பது கேட்டது.



( ix )

நீங்கள் சந்தோசப்படுவது தெரி கின்றது. எல்லாக் கதைகளும் சந்தோசமாக முடியவேண்டும். என்றுதான் உள்ளம் நினைக்கும். ஆனால், யதார்த்தத்தில் அப்படி நடைபெறுவதில்லை. நீங்கள் ( viii ) என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை வாசித்தவுடன் நிச்சயம் சந்தோசப்பட்டிருப்பீர்கள். ஆனால் அப்படியொன்றும் நடக்கவேயில்லை. எனது வலது கையின் சுட்டு விரலால் பேனை யைப் பிடித்து இன்னும் எழுதமுடியவில்லை வலிக்கிறது. நெஞ்சிலும்தான்.