Tuesday, August 12, 2008

வண்டிக்காரன்



மாட்டு வண்டியை வேகமாக செலுத்துவதில் வண்டிக்காரன் முனைப்பாக இருந்தான். மாடு கொஞ்சம் சலிக்கும் போது அதன் முதுகில் அவனது கையிலுள்ள சாட்டையால் இரண்டு அடி போடுவான். மாடு மீண்டும் வேகமாய் ஓடும். பின்னால் வண்டி இன்னும் அதிகமாக குலுங்கத் தொடங்கும். பயணிகள் எமக்கு அவசரமில்லாதபோதும் அவன் ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறான் என்று புரியவே இல்லை. பயணிகள் நாம் ஒவ்வொருவரும் முகங்களைப் பார்த்து விளித்தோம்.


பாதைகளிலுள்ள குழிகளில் வண்டியின் சக்கரங்கள் விழுந்து மேலெழும் போது எமது தலைகள் வண்டியின் கூறையில் பட்டு வலித்தன. வண்டிக்காரன் முன்னால் செல்கின்ற வண்டிகளை யெல்லாம் முந்திச் செல்வதில் அக்கறைக் காட்டினான். வீதியில் எதிரே வரும் வண்டிகள் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை. அந்த வண்டிக்காரர்கள் வண்டிகளை ஓரமாக்கி வழி விட்டனர். அவ்வண்டிகளின் மாடுகள் எங்களை முறைத்துப்பார்த்தன. சில வேளை ம்பே... எனக் கத்தின. இதையெல்லாம் எமது வண்டிக்காரன் கவனத் திலெடுப்பதே இல்லை. அவன் பாட்டில் ஓட்டிக் கொண்டே இருந்தான். எமக்கு நெஞ்சு திக் திக் என்றது. எமது பயணம் முடிந்திடுமா? அல்லது எமது இந்த வாழ்க்கைப் பயணமே முடிந்திடுமா என்ற அச்சம் அடிக்கடி வந்தது.



அப்போது இறைவன் ஒருவன்தான் என்று சாட்சி கூறுகின்றேன். அவன் தனித்தவன் அவனுக்கு நிகரேதுமில்லை... என்று மொழிந்துக் கொண்டேன். என் சகப்பயணிகளும் மொழிந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

ஒரு இடத்தில் வண்டிக்காரன் மாட்டின் கயிற்றைப் பிடித்திழுத்து வண்டியை நிறுத்தினான். சில துருப்பிடித்திருந்த இரும்புப் பெட்டிகளைக் காட்டி, இது என்ன என்று தெரியுமா? என்று கேட்டான். நாங்கள் எதுவும் புரியாமல் விளித்தோம். ஏதோ டிப்போ என்று சில எழுத்துக்களைக் கொண்ட போர்ட் ஒன்று தொங்கியது.


பயணிகள் நாங்கள் எல்லோரும் இளைஞர்கள் என்பதால் எமக்குப் போதிய அறிவில்லை என்பதை அந்த முதிய வண்டிக்காரன் அந்தக் கேள்வியின் மூலம் எமக்குச் சொல்வது தெரிந்தது. எங்களுக்குத் தெரியாது, நீங்களே சொல்லுங்களேன் என்று சக பயணி ஒருவன் கேட்டான். இதற்கு பஸ் என்று சொல்வார்கள். சிலர் பேரூந்து என்று சொல்வார்கள். முன்னரெல்லாம் இந்த மாட்டுவண்டிகள் இல்லை. எல்லோரும் இதுபோன்ற பல வாகனங்களில் தான் பயணம் செய்வார்கள். சில வாகனங்களில் சில வெளியில் எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே குளிராக இருக்கும். பஞ்சில் அமர்ந்திருப்பது போன்றிருக்கும். அது ஒரு காலம் என்றுவிட்டு வண்டிக்காரன் பெருமூச்சு விட்டான்.

இந்தப் பெட்டிகளை மாடுகளா இழுக்கும் என்று மற்றுமொரு பயணி கேட்டான்.இல்லப்பா, பெற்றோல்ன்டு ஒரு எண்ணெய் இருந்திச்சி அத ஊத்தித்தான் ஓட்டனும்...எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் எங்களை நன்றாக ஏமாற்றுகின்றான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால், வண்டிக்காரன் எங்களுக்கு கஷ்டப்பட்டு விளங்கப்படுத்த முயற்சித்தான். எங்களுக்கு விளங்கவேயில்லை. அவனுக்கு அது விளங்கிய போது நாங்கள் போவோம் என்று கூறி மாட்டின் முதுகின்மீது இரண்டு அடி அடித்தான். அப்போது திரும்பி நான் உங்களை மாதிரி பொடியன் காலத்துல பஸ் வண்டியைத்தான் ஓட்டினேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் மாட்டை விரட்டத் தொடங்கினான். அன்று 2062.10.28 ஆம் திகதியாகும். இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு 18 ஆவது பிறந்தநாள்.