Saturday, September 12, 2009

பால்மா வாங்கிட்டு வாங்க...


இந்தக் கதையை சொல்லும் முன் ஒரு விடயத்தை கூறலாமென்று நினைக்கின்றேன். நீங்கள் யாரும் என்னைத் தவறாக விளங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். முஸ்லிமான ஒவ்வொருவரும் ஏதோவொரு தஃவா அமைப்புடன் இணைந்திருப்பது அவர்களுக்கு பாதுகாப் பானதாகும்.

நானும் ஒரு தஃவா அமைப்பில் சில பணிகளை அல்லாஹ்வுக்காக செய்து வருகிறேன். குறிப்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் மிகவும் மும்முரமாக ஈடுபடுவதுண்டு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ரிபா நானா வருகிறார்.

"அஸ்ஸலாமு அலைக்கும் ரிபா நானா"

"வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு"

"நான் இன்டைக்கு அந்திக்கு ஒங்கட ஊட்டுக்கு வரத்தான் இருந்தேன். நீங்க முந்திட்டிங்க. கடைய மூடிட்டிங்களா?"

"ம் இன்டக்கி லீவு நாள்தானே, பஸாரில் ஆட்களும் இல்லை. அதோட கொஞ்சம் உங்கள் எல்லாரையும் சந்தித்துவிட்டுப் போகலாமென்று நினைத்து வந்தேன். லாபீர் நானாவும் வாரதென்று சொன்னார்."

நான் போனாவை மூடி வைத்து விடுகிறேன். கொஞ் சம் நேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே லாபிர் நானா வும் வந்தார். மனைவி பிளேன்டி ஊத்தியிருப்பதாக மகள் அஷ்பா சொல்லிவிட்டுச் சென்றாள்.

பிளேன்டியைக் குடித்துக் கொண்டே ஓ எல் மாண வர்களுக்கான புரோக்ரேம்பற்றி பேசிக் கொண்டிருந் தோம். மஃரிப் நேரமாகியது. பள்ளிக்குச் செல்வோம் என்று மூவருமாக வெளிக்கிட்டோம். அஷ்பா ஓடி வந்து சொன்னாள்; "உம்மா, தம்பிக்கு பால்மா வாங் கிட்டு வரட்டாம்."

"சரிம்மா"

மஃரிப் தொழுதுவிட்டு கொஞ்ச நேரம் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போதே இஷாவுடைய நேரமாகி யது. இஷா தொழுதுவிட்டே கலந்துரையாடலை ஆரம் பிக்கலாமென லாபிர் நானா சொன்னார். எனவே, அவ ரது கருத்தை ஏற்றுக் கொண்டோம்.

கலந்துரையாடல் ஆரம்பமானது. எவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவது,வளவாளர்களாக யாரை அழைக்கலாம் போன்ற விடயங்களை பேசி முடிக்கும் போதே 10.00 மணி ஆகிவிட்டது. இப்போதைக்கு முடித்தால்தான் 11.00 மணிக்கேனும் வீட்டுக்கு போய் சேரலாம் என நினைத்துக் கொண்டு பொறுப்புக்களை நாளைய கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளலாம். இப்போதைக்கு இதனை முடித்துக் கொள்வோமா என்று எனது கருத்தைத் தெரிவித்தேன். எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

11.00 மணிக்கு முன்பதாகவே வீட்டை அடைந்து விட்டேன். அஷ்பா,அம்ஜத் இருவரும் தூங்கியிருந் தனர். ஹுஸ்னா மட்டும் விழித்திருந்தாள். இருவருமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லும்போதுதான் "பால்மா கொண்டு வந்திங்களா?" என்று கேட்டாள்.

"இல்லவா மறந்திட்டன்"

"நேற்றே பால்மா முடிந்துவிட்டது, நேத்தும் வெளிய போகக்குல்ல சொன்னேன். மறந்துட்டு வந் தீங்க. இன்டைக்கும் மறந்திட்டிங்க"

"சரிம்மா இன்ஷா அல்லாஹ் நாளைக்கு ஸுப ஹுக்கு வாங்கிட்டு வாறேன்"

ஸுபஹுக்குப் பள்ளிக்குச் செல்லும்போது இமாம் இரண்டாவது ரகஆத்தில் இருந்தார். தொழுகை முடிந்து மஃஸூராத் ஓதிவிட்டு வெளியே வரும்போது ரஸ்மி வந்திருந்தான்.

"அஸ்ஸலாமுஅலைக்கும் ரஸ்மி சுகமா இருக்கிறிங் களா? எப்ப வந்திங்க"

"நேற்று வந்தேன் சேர்"

"கொலேஜ்ல என்ன விசேடங்கள்"

"பெரிதாக ஒன்றுமில்லை சேர், முஹம்மத் சேர் ஸலாம் சொன்னதாக சொல்லச் சொன்னார்."

உரையாடல் தொடர்ந்தது ரஸ்மியையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றேன். ஹுஸ்னா தேனீரும் பிஸ்கட்டும் தந்தாள். ரஸ்மி விடைபெற்றுச் செல்லும் போது ஏழு மணியாகிவிட்டது. நானும் பாடசாலை செல்லும் நேரமாகிவிட்டது.

அவசரமாக ரெடியாகிக் கொண்டு, ஹுஸ்னா மேசையில் வைத்திருந்த கடலையை நானும் அஷ் பாவும் சாப்பிட்டோம்.

"ஹுஸ்னா என்னமாவது வாங்கிட்டு வரனுமா?"

"நீங்க இன்னும் புள்ளக்கி பால்மாவே வாங்கிட்டு வரல. ரெண்டு நாளாகிடிச்சி. புள்ள பாவம், ஸ்கூல்விட்டு வரும் போது மறந்திடாம வாங்கிட்டு வாங்க"

"சரிம்மா"

"சரின்டு சொல்லிவிட்டு போவிங்க யாரோடை யாவது பேசிக் கொண்டு வூட்டுக்கே வந்திருவிங்க. எனக்கு ஏலுமென்டா நான் கடைக்குப் போய் வாங் கிட்டு வந்திருப்பேன்."

"இல்ல, இன்டக்கி கட்டாயம் வாங்கிட்டு வரு வேன். வேறேதும் சாமான்கள் வாங்கிட்டு வரனுமா? மரக்கறி இருக்குதா? அஷ்பாக்கு என்ன வேணும்?"

"மரக்கறி ஏதும் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க. வேறொன்டும் தேவயில்ல."

ஹுஸ்னா பாடசாலைக் காலத்தில்கூட ஏழாம் வகுப் பிற்குப் பிறகு ஒரு கொப்பி வாங்கக் கூட கடைக்குச் சென்றதில்லை என்பதை என்னிடம் சொல்லியிருக்கி றாள். அவளுக்கு உடைகள் வாங்குவதற்குக் கூட உம் மாவும் வாப்பாவும் இல்லாமல் செல்வதில்லை. அதை மாமியும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். திருமணம் முடித்ததன் பின்னர் அவள் கடைக்குச் செல்வதற்கான சந்தர்ப்பங்களை நான் ஏற்படுத்தியதே இல்லை. சிலவேளை, வேலைப்பளுக்களால் அவள் சொன்னதை மறந்து மூன்று நாட்கள் கடந்து விடுவதும் உண்டு.

இன்று ஸ்கூல் முடிந்து வரும்போது எப்படியும் பால்மாவை வாங்கிக்கொண்டு வரவேண்டுமென நினைத்துக் கொண்டே சென்றேன்.

கடைசிப் பாடம் எனக்கு ஃப்ரீயாக இருந்தது. ஸாஹிர் சேர் வந்தார்.

"சேர் எப்படி சேர். ப்ரோக்ரேம் வேலைகள் முடிஞ் சிட்டதா?"

"ஓம் சேர். ஃபைல்கள பிரின்ட்பண்ணி ஊட்ல வெச்சிருக்கிறேன். ரஸ்மி வந்திருக்கிறார். அவரிடம் ஸ்டிக்கர்களை ஒட்டக் குடுக்கலாம்."

"சரி சேர் நான் ப்ரின்ஸிபல கொஞ்சம் பாத்துட்டு வாரன். அப்படியே பெல் அடிச்சதும் பேவோம்."

"சரி சேர்"

அலுவலகத்திற்குச் சென்று கையொப்பம் வைத்து விட்டு நானும் ஸாஹிர் சேருமாக வீட்டுக்கு வரும் போது அஷ்பா மொன்டிசூரி உடையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் "அபீ இப்பயும் பால்மாவை வாங்கிட்டு வரல்லயா?" என்றாள்.

No comments: