Tuesday, June 17, 2008

இந்த சில நாட்களாய்...



மிக அவசரமாக செல்ல வேண்டியிருந்தாலும் மேகங்களுக்கிடையே மெதுவாக மறைய முனைந்த நிலாவின் பாதித்தோற்றத்தை,அதன் ஒளிப்பரவலின் சிதறலை ரசிக்காதிருக்க முடியவில்லை.சைக்கிலும் கூட வேகமாக செல்ல மறுத்தது. சற்றுத்தாமதமாகவே வீட்டை அடைந்தபோது வராந்தை கதிரையில் அஹ்மத் அமர்ந்திருந்தான்.
வீடு மிக அமைதியாக இருந்தது. இந்த சில நாட்களாய் இப்படித்தான். வாசலில் என் சத்தம் கேட்டதுமே ஓடி வரும் மூத்த மகள் அஸ்பாவையும் காணவில்லை. சிறியவன் அம்ஜத் நுளம்பு வலைக்குள் குப்புறப் படுத்திருந்தான். வலையை விலக்கிவிட்டு நெற்றியில் ஆழமாக முத்தமிட்டுவிட்டு மகளிடம் சென்றேன். அவளை தொட்டபோது உடம்பின் சூடு நன்றாகவே விளங்கியது. மெதுவாக கண் திறந்தாள்.
“என்னம்மா” என்றேன்.
“காய்ச்சலடிக்குது வாப்பா” என்றாள்.
கடுமையான வேதனைபோலும்.அவளையும் மீறி கண்ணீர் பிரவகித்தது.“மருந்து குடிச்சீங்களா?” என்றேன்.
“ம்..உம்மா தந்திச்சி..கொத்தமல்லி ஆவிபிடிக்க கொதிக்க வைச்சிருக்குது.”அவளை அப்படியே தூக்கிச்சென்று கட்டிலில் படுக்க வைத்தேன்.தலைக்கு சிறிய தலகானியை வைத்துவிட்டு சமையலறைக்கு நகர்ந்தேன்.
என் மனைவி ஹுஸ்னா சமையலில் மும்முரமாக இருந்தாள்.நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.அவளது சமையல் எளிமையாக இருந்தாலும் ருசியாகத்தான் இருக்கும்.அவள் என்னைக் கண்டுக்கொண்டதாக காட்டிக்கொள்ளவேயில்லை. இந்த சில நாட்களாய் இப்படித்தான்.
flask இலிருந்த தேனீரை எனக்கும் அஹ்மதுக்குமாக எடுத்துக்கொண்டு வராந்தைக்கு சென்றேன்.இந்த இடைவெளியில் அழுதிருப்பான் போலும்.
“என்னடா அழுதியா?” என்றேன்.
“அவளும் நீயும்தான் எனக்குள்ள ஆறுதல்கள்.ஆனால் அவள்… .”
“ஏன்டா அப்படிப் பேசுற.நேற்று நான் அவளைக் கண்டேன்.நன்றாகத்தானே பேசினாள்.நீதான் அவளைப் புரிந்துக்கொள்ளவில்லையா?”
“இல்லடா பழசை மறந்து நேற்று officeசெல்லும்போது சொல்லிவிட்டு சென்றேன்.ஆனால் அவள் என்னை இந்த திருமணம் முடித்த ஆறு மாதங்களுக்குள் நடந்துக்கொள்வதுப்போல அங்கீகரிக்கவில்லை”
“இந்ந நேரத்தில நீ ஏன் வந்த?அவள் வீட்ல தனியாகத்தானே இருப்பாள்?”
“இல்லடா இன்டைக்கு மாமி வந்திருக்காங்க.”
“அவங்களுக்குத் தெரியுமா?”
“அவங்களுக்கு அதுக்கு நேரமில்லடா.”
“நீ அவளோட தெளிவா பேசினியா?உனக்கு எத்தனை தடவை சொன்னேன்.”
“பேசத்தான் நினைக்கிற,ஆனா பேச ஏலாம இருக்குது.ஏன்டா எனக்கு இப்படி சோதனை வருது?இத்தனை நாள் கஸ்டப்பட்டுவிட்டு சந்தோஸமாக வாழலாம் என நினைத்தால்…”அவனால் பேச முடியவில்லை.
பாடசாலைக் காலத்திலிருந்தே என் நெருங்கிய நண்பன்.மிகவும் மெல்லிய மனது.7 மாதங்களுக்கு முன்புதான் சீனாவின் பெயின்ட் தொழிற்சாலை ஒன்றில் வேலைசெய்தவிட்டு, இலங்கை கிளைக்கு மாற்றல் பெற்று வந்தான்.வந்து ஒரு மாதத்திலே காத்திருந்த பாடசாலைத் தோழியை மணந்துக்கொண்டான்.
சமையல் அறையிலே ஏதோ விழும் சத்தம் கெட்டது.பதறிப் போனேன்.உள்ளே ஹுஸ்னா சஞ்சலமின்றி இருந்தாள்.மேசையில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.அது ஒரு சமிக்ஞையாக இருந்திருக்கும்.இந்த சில நாட்களாய் இப்படித்தான்.
நீண்ட நாளைக்கு பிறகு அஹ்மதும் உட்கார்ந்து சாப்பிட்டது சந்தோஷமாக இருந்தது. நான் உரையாடலை தொடர்ந்தேன்.
“ஏன் அப்படி நடந்துக் கொள்கிறாள். நீ என்னமாவது செய்திருப்பாய்.”
“ம்…மூன்று நாளைக்கு முன்பு வேலைக்கு போக உடுப்பு ஒன்றையும் கழுவிப்போடடிருக்கவில்லை.கொஞ்சம் கடுமையாகவே ஏசிவிட்டேன்.பிறகுதான் ஞாபகம் வந்தது அவள் கையில் சுடுத்தண்ணி ஊத்துப்பட்டு எரிகாயம் ஏற்பட்டிருந்தது.”
“நீ sorryசொன்னியா?”
“இல்லடா.”
“நீ sorry சொல்லி அப்பவே இரக்கமாக பேசியிருந்தா,மன்னிச்சிருப்பா.அதுக்கு உன்ட பெரியதனம் விடல இல்லியா?”சற்று சத்தமாகவே பேசிவிட்டேன்.அவன் மெளனமாக இருந்தான்.கண்கள் கலங்கியிருந்தன.
ஹுஸ்னா மகளுக்கு கொத்தமல்லி ஆவிபிடிக்க கொதித்த கொத்தமல்லி நீரை எடுத்துச் சென்றாள். என்னை முறைத்த பார்வையில் என் மீது அதனை ஊற்றி விடுவாளோ என்ற அச்சம் தோன்றியது. எனினும் அவளது அன்பில் எனக்கு அதை விடவும் நம்பிக்கையிருந்தது. அஹ்மதை நானே கூட்டிச்சென்று வீட்டில் விடும் போது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
இத்தனை தாமதமாய் இந்த ஆறுமாத திருமண வாழ்வில் வீடு சென்றதில்லை என்பதை அவன் சொல்லியிருந்தான். கதவு திறந்திருந்தது. உள்ளே கதிரையில் அவன் மனைவி தூங்கியிருந்தாள். அவன் தட்டி எழுப்பியவுடன் திடுக்கிட்டு எழுந்தவள் அவனை ஆரத்தழுவிக்கொண்டாள். அவனும்தான்…நான் கதவை சாத்திவிட்டு வெளியேறினேன்.
வீட்டினுள் மகள் எழுந்து அழுதுக்கொண்டிருந்தாள். மகனும் கத்துகின்றான். இருவரையும் சமாதானப்படுத்துவதில் அலுத்துப் போயிருந்தாள் ஹுஸ்னா. மெதுவாக மகளைத் தூக்கியெடுத்து தாலாட்டி உட்கார வைத்துவிட்டு திரும்பும்போது மகனும் தாயின் மடியில் தூங்கியிருந்தாள்.ஹுஸ்னாவின் முகத்தைப் பார்த்தேன். குனிந்துக்கொண்டாள். நான் தனியாகப் போய் படுக்கையில் சாய்ந்துக்கொண்டேன். இந்த சில நாட்களாய் இப்படித்தான்.
பொழுது யாருக்காகவும் காத்திருப்பதில்லை.காலை உதயமானது.பல் துலக்கி தாமதமாகமல் தயாராகிக் கொண்டிருக்கையில் தேனீர் ஊற்றி வந்துள்ளதன் அடையாளமாய் கோப்பை ஆடும் சத்தம் கேட்டது.மகள் அஸ்பா இன்னும் படுக்கையில் தான் இருந்தாள்.அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு வந்து மருந்து எடுக்க கூட்டிக்கொண்டுப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு தேனீரைக் குடித்தேன்.நன்றாக இருந்தது.அதற்காக நன்றி சொல்லமுடியவுமில்லை.
மகளின் நெற்றியில் கையை வைத்தபோது விழித்துவட்டாள்.
“நான் பகலைக்கு வந்து மருந்துக்கு கூட்டிக்கொண்டுப்போறேன்.நீங்க உம்மாகிட்ட மருந்து வாங்கி குடிங்க.”
என்று முடிக்கையில் அவள்..“வாப்பா நீங்க முந்தி மாதிரி உம்மாகிட்ட சொல்லிட்டு போறதில்ல.பேசுறதுமில்ல.உம்மா எங்கள உட்டுட்டு போயிட்டா?”
ஹுஸ்னா கையில் பெரிய பேக்குடன் மகனைத் தோளில் போட்டுக்கொண்டு செல்வதுப்போலவும்,மகள் அஸ்பா வாசலில் நின்று அழுவதுப்போலவும்,நான் தலையில் கை வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்திருப்பதுப்போலவும் எண்ணமொன்று மனதில் தோன்றி மறைந்தது.எனக்குள் அச்சம் குடிக்கொண்டது.இதயம் வேகமாக துடித்தது.கையில் பேக்கை எடுத்துக்கொண்டு எட்டிப் பார்த்தேன்.சமையலறை வாசலில் ஹுஸ்னா நின்றிருந்தாள்.
நன்றி: சலனம் இதழ் - 06

1 comment:

Hopevictory said...

masha allah sir
Barakallahu fee ilmuk