Tuesday, June 17, 2008


நீதம்


மூலம் - நஜீப் அல் கைலானி


நான் அவர்களுக்குச் சொன்னேன் 'எனக்கு ஆயுதங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது' அதனை உண்மையோடும், உறுதியோடும்தான் சொன்னேன். என்னுடைய வீக்கங்களும், கண்ணீர்த் துளிகளும் அதனை மேலும் உறுதிப்படுத்தின. அல்லாஹ் மீதும் சத்தியம் செய்தேன். கோபமான அவர்களுடைய பார்வைகள் என்மீது படிந்திருந்தன. வேதனை ஏற்படுத்தக் கூடிய சாட்டைகள் அவர்களின் கைகளில் இருந்தன. அவர்களுடைய முகங்களும் கூட இறுகி கடுமையாகி இருந்தன. அதாவது அவர்கள் யாரையுமே நம்பமாட்டார்கள்... நான் என்ன செய்வேன்?
மீண்டும் ஒரு தடவை சாட்டை என் நிர்வாண உடலைத் தாக்கியது. எனது உடல் பயங்கர வேதனைகளையெல்லாம் நன்றாக உணர்ந்தது. தாங்கும் சக்தியும் ஓரளவுதானே இருக்கின்றது... அவர்கள் எனது நகங்களில் ஒன்றைக் கழற்றியபோது என்னைச் சூழவும் கடும் இருள் சூழந்திருப்பது போலிருந்தது... அருவருக்கத்தக்க வேதனைகள் என் உணர்வுகளை இழக்கச் செய்துவிட்டன. கொஞ்சம் நடந்தேன்.
அவர்கள் இன்னுமொரு நகத்தைப் பிடுங்வதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். அதனை செய்பவன் அவனுடைய தொழிலை நன்றாகச் செய்கின்றான். அவனுடைய முகத்திலே ஒரு தசையேனும் துடிக்கவில்லை. நான் உதவி வேண்டி கூச்சலிட்டேன். "ஹராம் மனிதர்களே" ஷைத்தான் பரிகாசமாக புன்னகைத்தான். "நாங்கள் ஹலாலையும், ஹராத்தையும் உன்னைவிட நன்றாக அறிவோம். நீதான் உன்னை வேதனைப்படுத்திக் கொள்கின்றாய். நாங்கள் மரணம் வரை இதனைச் செய்து கொண்டிருப்போம்... மரணம்.... அப்போது உன்னை ஒரு குப்பை வண்டி சுமந்து செல்லும். அது பாலை வனத்திலுள்ள ஆழமான குழியொன்றில் உன்னைப் போட்டுவிடும். இதுதான் நீ அது எங்கு இருக்கின்றது என்று சொல்லாவிட்டால் நடக்கும்."
எனது கண்கள் உறங்கி மூன்று நாட்களாகின்றன. எனது வாப்பா வீட்டில் முன்னாலுள்ள பெரிய மரமொன்றின் நிழலிலிருந்து சிகரட் புகைத்துக் கொண்டிருப்பார். என் உம்மா எந்த சந்தேகமுமில்லை. கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வீட்டின் உள் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள். எனது தங்கை அவளது 'பிளாஸ்டிக்' பொம்மையான 'ஹனா'வோடு மழலை மொழியில் பேசிக் கொண்டிருப்பாள். எமது ஏழைக் கிராமம் கடந்த 1000 வருடங்களைப் போலவே பொறுமையாக அமைதியாக அதனது வேலைகளை செய்துகொண்டிருக்கும். நான் இங்கு அல்கோஸ்களை (தூக்கிலிடுபவர்) சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஆயுதங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. என் மீதுள்ள எல்லாக் குற்றமும் பாடசாலைக் கால பழைய நண்பன் இப்போது குற்றவாளி என்பதாகும். அவனது பெயர் அப்துல்லாஹ்".வேதனையோடும் துன்பத்தோடும் சில மணித்தியாலங்கள் கடந்தன. அவை ஒரு வருடம் போன்றிருந்தது. பொதுமக்கள் துன்பங்களைச் சகித்துக் கொள்வது பற்றி, அர்ப்பணம் பற்றி, வீரம் பற்றி பத்திரிகைகளில் மிம்பர்களில், பேசித் தள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் இப்போது நான் நினைத்துப் பார்கின்றேன்.
என்னை நான் பார்க்கின்றேன். எதைக் காண்கின்றேன்? நம்பிக்கையீனத்தினதும், சிதைவுகளினதும், சிந்தனை சிக்கல்களினதும் குவியல்... வானத்தைப் பார்கின்றேன். ஆ... வானமில்லை. ஏனெனில் கூரை கறுப்பு நிறமாயிருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. கதவு தண்டவாள இரும்பினாலானது. அதற்கு மேல் கறுத்த திரையொன்றை போட்டிருந்தார்கள். நான் உயிரோடிருப்பது சாத்தியமில்லை. அது எனக்கு விளங்குகின்றது. என்னை மரணம் பீடித்து விட்டதா? நானிப்போது கப்ரின் வேதனையிலிருந்து விடுதலை பெறுகின்றேனா? நல்லவர்கள் இவற்றைப் பார்த்து சிரிப்பார்கள். ஏனெனில் அவர்கள் 20ம் நூற்றாண்டின் நாகரீகம், அபிவிருத்தி, மனிதனின் ஆரம்பம் பற்றி அதிகம் வாசிக்கிறார்கள். நான் நேற்றிலிருக்கின்றேன். அவர்களைப் போன்று இந்த ஆய்வு ஒரு பெரிய அடியை அடித்தது.
நான் மெதுவாக இன்னொரு பக்கத்திற்கு நடந்தேன். உண்மையின் பக்கம்... நான் ஏன் இவர்களை ஏமாற்ற வேண்டும். பெரிய எண்ணங்கள் என் மனதில் இருக்கின்றன. இறந்துவிடலாம்.நான் தப்பித்து விட்டால்... ஆஹ் நான் எனக்காகவே வாழ்வேன். யாரோடும் நட்புக் கொள்ள மாட்டேன். நான் நான்... சாட்டையும் பிடுங்கப்பட்ட நகங்களும், அல்கோஸ்களின் இழிவான வார்த்தைகளும் முப்பது வருடமாக நான் கற்ற, எனது உள்ளத்திலிருந்த அனைத்தையும் சிதைத்துவிட்டது. மூன்று நாட்களில் எனது உள்ளத்திலிருந்த நல்ல வாசகங்கள் அழிந்துவிட்டன. இதற்குமேல் எந்தவொரு வேதனையையும் தாங்க முடியாது என்பதை உணர்ந்தேன். எனது அனைத்து சக்திகளும் விழுந்துவிட்டன. நான் மிருகத்தை விடவும் மிகவும் பலவீனமாகிவிட்டேன். எல்லாவற்றையும் அல்கோஸ்களிடம் தொலைத்துவிட்டேன். இடது கையின் ஆறாவது விரலைப் பிடுங்குவதற்காக ஷைத்தான் நெருங்கிய போது கெஞ்சலாக கத்தினேன்.
"எனக்கு இரக்கம் காட்டுங்க"
நான் உடன்படாதவற்றை அவன் மென்மையாகச் சொன்னான்.
"மகனே நீ ஏன் உன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்துல்லாஹ்விடம் ஆயுதங்கள் இருக்கின்றன. எங்களுடைய விசாரணைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன. நீ மட்டும்தான் அதனை சொல்வதற்குரிய ஒரேயாள்"
"எனக்குத் தெரியாது" என்றேன்.
எனது வார்த்தைகளை கண்ணீர்த்துளிகள் முந்திக் கொண்டன. அவனுடைய முகம் கறுத்தது. என்னுடைய கையை இழுத்து ஆறாம் விரல் நகத்தைக் கழற்றினான். அருவருக்கத்தக்க வேதனை... இரத்தம்... மரணம் மீதான பயம்... நம்பிக்கையீனம் எனது தலை சுற்றியது. பல காட்சி கலந்தன. ஒநாய்கள், நரிகள், காட்டு மிருகங்கள் நிறைந்த பிரமாண்டமான காடு. இரத்தம் தோய்ந்த பற்கள்... நகங்கள், முட்கள், இருள், பயம் என் உதடுகள் சில வார்த்தைகளை முணுமுணுத்தன.
"அப்துல்லாஹ்விடம் ஆயுதங்கள் இருக்கின்றன"
சிரிப்புக்களால் இவ்விடம் நிறைந்தது. நான் பேசுவதற்கு முயன்றேன். தொண்டைக்குள் வார்த்தைகள் அடைத்துக் கொண்டன. பின்னர் கஷ்டப்பட்டு பேசினேன். சில வார்த்தைகளை கூச்சலுக்கும், பரிகாஷங்களுக்கும், சிரிப்புக்களுக்குமிடையிலே பேசினேன். அல்கோஸ்கள் பேசிக் கொண்டனர்.
"மனிதர்களில் இந்த வகையினரை எனக்குத் தெரியும். மரணத்தின் விளிம்பில்தான் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களின் கண்ணீர்த்துளிகள் எப்போதும் பொய்யானவை. அவர்களது சத்தியங்களனைத்தும் பொய்யானது மிருகங்கள்!"
"கைகளிரண்டையும் கழற்றினாலும் பொறுமையாயிருப்பார்கள் என்ன மனிதர்கள்"
அவர்கள் என்னை மீண்டும் அறைக்கு கொண்டு வந்து வீசி எறிந்தார்கள். நான் தொடர்ந்தும் வேதனையை உணர்ந்தேன். எனக்கு தூக்கமாக இருந்தது. நான் இன்னும் சில நேரம் இருப்பேனா?" அஞ்சிக் கொண்டும், இறைஞ்சிக் கொண்டும் எழுந்தேன். இது அப்துல்லாஹ்வின் குரல். எனக்கு நன்கு பிரித்தறிய முடியும். என்னிதயம் பயத்தால் அடித்துக் கொண்டது. நான் எழுந்து நின்றேன். எனது உடம்பு முழுவதும் நடுங்கியது. நான் வேதனையை உணர்ந்தேன். சில வினாடிகளில் சிறைக்காவலன் வந்து
"உனக்கு ஏதும் தேவையா"என்றான்.
நான் பதிலளிக்காதபோது அவன் தனது தலையை சாய்த்து
"அப்துல்லாஹ் ஒரு கஞ்சன். அவன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். உன்னைப் பொறுத்தவரையில் நீ தப்பித்து விட்டாய். நீ அறிவுள்ளவன். அப்துல்லாஹ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இறந்திடுவான்."
நான் பைத்தியம் போல கத்தினேன்.
"இல்லை அப்துல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டவன்"
"நீ அவனுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்கிறாயா?"
"இல்லை நான் ஏற்றுக் கொள்ளவில்லை"
"நடுங்கிக் கொண்டிருந்த இரண்டு கைகளிலும் பிடுங்கப்பட்ட நகங்களைப் பார்த்தேன். பின்னர் சிறைக் காவலனைப் பார்த்து கவலையோடு
"நானும் உங்களைப் போன்று அல்கோஸ்தான். நான் பொய்யன்... பொய்யன்... பொய்யன்... எனது முகத்தில் விழுந்த பலமான அடி எதிரொலித்தது.கோபமாயிருந்த சிறைக் காவலனைப் பார்த்தேன். அவனது கண்கள் எரிந்தன. அவனுடைய உதடுகள் துடித்தன. அவன் சொல்வதைக் கேட்டேன்."நீங்கள் எங்களை பரிகஷிக்கின்றீர்களா?"
முகத்தின் மீது கையை வைத்துக் கொண்டு அலறியவனாக
"அப்துல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டவன். நான் என்னுடைய வேதனையிலிருந்து தப்புவதற்கே சொன்னேன்." என்றேன்.அவன் இழிவாக கேட்டான்.
"நீ உன்னை வீரனென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்." "இல்லை நான் அதைச் சொல்லவில்லை. நான் தியாகி.. நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. என்ட வாழ்க்கை முழுவதும் எந்தப் பாவமும் செய்ததில்லை. அல்லாஹ்வுக்கு தெரியும் என்ட ஊர் மக்களுக்குத் தெரியும்."
அவன் வயிற்றில் உதைத்துக் கொண்டே கத்தினான்.
"உண்ட வாப்பா நாசமாப் போகட்டும். உன்ட ஊர் நாசமாப் போகட்டும்.என் வயிற்றில் எற்பட்ட வேதனையை தாங்க முடியாமல்
"என்னை இராணுவத்தினரிடம் கூட்டிச் செல்லுங்கள். நான் உண்மையைச் சொல்ல விரும்புகின்றேன்" என்றேன்.
"எமக்கு உன்னிடம் சில தேவைகள் இருக்கின்றன. நீ ஏற்றுக் கொண்டதையும், உன் கையெழுத்தையும் எடுக்க வேண்டியிருக்கின்றது. இன்றைய பத்திரிகைகள் எழுதியிருந்தவற்றை நீ பார்க்கல்லையா? பார்... இது உன்னுடையதும் அப்துல்லாஹ்வினதும் Photos. நீ ஏற்றுக் கொண்டது இதற்கு மேல் என்ன? நீ எங்களை அதிகாரிகளிடமும், மக்களிடமும் சிக்க வைக்க பார்க்கின்றாயா?"
அவன் பின்னால் கதவைத் திறந்து திரும்பினான். பயங்கர அமைதி நிலவியது. எனது தலையை சுவரில் அடித்துக் கொண்டேன். கொஞ்சமேனும் இரக்கமும், மனிதாபிமானமும் இல்லை. அவர்களின் இரும்புக் கதவு... அல்கோஸ்களின் பார்வைகள், இறுகிய முகங்கள்... புதுமையான அன்பை அறியாத... அல்லாஹ் அறிவான். திரைச் சீலையிலிருந்த சிறிய துளையினூடே பார்த்தேன். சிறைச்சாலை வைத்தியர் ஓடுகின்றார். என்ன நடந்தது? வழமைபோல யாராவது ஒரு அல்கோஸ் அடித்திருப்பான். எனினும் நான் அப்துல்லாஹ்வின் குரலை கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தின் பின் போன வழியிலே வைத்தியர் திரும்பி வந்தார். பின்னர் சிறிய சக்கரங்களையுடைய மேசையொன்றின் மீது அது வைக்கப்பட்டிந்தது அந்தச் சக்கரங்கள் வேதனையால் முணங்குவது போன்று கீச்சொலியை ஏற்படுத்தின. மெல்லிய வெளிச்சமுடைய சிறைக் கூடத்திலிருந்து நான்கு அல்கோஸ்கள் நெருங்கி வந்தனர். அவர்களில் ஒருவன்
"அப்துல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றான்.
இரண்டாமவன் "ஆயுதம் எங்கே"என்றான்.
நான் நடுங்கிக் கொண்டே "உங்களின் சிந்தனையில்தான் ஆயுதம் இருக்pன்றது" என்றேன்.
டேய் மகனே ஏனடா அவனிடம் இருக்கிறதா ஒத்துக்கிட்ட?"
நான் ஹிஸ்டீரியா பிடித்தவன் போல சிரித்தேன்.
"நீங்கள் அதனை விரும்பினீர்கள் நான் எவ்வித உணர்வுமின்றி நடித்தேன்"
அவர்களில் ஒருவன் கண்சிமிட்டியவாறு
"அவன் இறந்துவிட்டான்" என்றான்.
நான் பைத்தியம்போல் மாறினேன். எல்லாத்திக்கிலும் அடித்தேன். காடு,.. மிருகங்கள்.. இரத்தம் தோய்ந்த பற்கள்.. நான் அடித்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அவர்கள் என்னை பிடித்துக் கொண்டார்கள். அவர்களின் தலைவன் சொன்னான்.
"நாங்க உண்மையைத்தான் விரும்புகின்றோம்."
நான் சாட்டைகளையும், நகங்கள் பிடுங்கிய கருவிகளையும் பார்த்தேன். பின் முணுமுணுத்தேன்.
"உண்மை?"அவர்களின் தலைவன் எந்தவித அதிகாரமுமின்றி சொன்னான்.
"ஆயுதமுமில்லை. ஒரு மரக்கட்டையுமில்லை.
"நான் அதையே தொடர்ந்து சொன்னேன்.
குறிப்பு: "இந்தக் கிறுக்கல்களை ஏதோ ஒரு நகரில்... ஏதோவொரு நாட்டில் நவீன காலத்தில்... 20 (21)ம் நூற்றாண்டில்... அறிவு சிவில் உலகில் உள்ள மனநோய் வைத்தியசாலையில் பதிவுசெய்தேன்.

(முற்றிற்று)


தமிழில்: பாஸிரா மைந்தன்


நன்றி -வைகறை இதழ் 02

No comments: